கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன.
இதனைத் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராவில் கிடைத்த காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும், காட்சிகளில் பதிவான இரண்டு பேரின் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு புகைப்படங்களைக் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டு பேரையும் தேடும் பணியில் கேரள, குமரி மாவட்ட காவல் துறையினர் தீவிரம் காட்டுகின்றனர். இதில் குற்றவாளியாகக் கருதப்படும் தவ்பீக் (27) என்பவர் குமரி மாவட்டம் இடலாக்குடியைச் சேர்ந்தவர். பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இவரது வீட்டில் கடந்த மாதம் தேசிய புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தியது கவனிக்கத்தக்கது.