கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூரில் அமைந்துள்ள குளத்தை நம்பிதான் அப்பகுதியில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இருப்பினும், இந்த குளம் பல ஆண்டுகளாக குப்பைகள் சேர்ந்து தூர்வாரப்படாமல் தண்ணீர் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுகுறித்து அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் குளத்தை தூர்வாருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்று திரண்டு தங்களுக்குள்ளாகவே பணத்தை செலவிட்டு குளத்தை தூர்வாரி சுத்தம் செய்துள்ளனர். இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில், இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் முதியவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் தேரூரில் நடைபெற்றது. தேரூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மருத்துவர் பகவதி பெருமாள் தொடங்கிவைத்தார்.