கன்னியாகுமரி: கரோனா தாக்கத்தாலும், தொடர் புயல் எச்சரிக்கையாலும் மீன்பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே மீனவர்கள் முடங்கி இருந்தனர். ஆனால் தற்போது தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாரம்பரிய மீன்பிடி தொழிலான கரை வலை தொழிலுக்கு மீண்டும் மாறியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், குறும்பனை, மண்டைக்காடு, முட்டம் உள்ளிட்ட சுற்று வட்டார மீனவ கிராம மக்கள் கடலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடல் பகுதிகளில் பாரம்பரியமாக கடலின் கரை பகுதிகளில் கரை வலை விரித்து மீன் பிடித்து வந்தனர்.
அதன்படி, நாட்டுப் படகு மூலம் கரையில் இருந்து ஒருசில மீட்டர் தூரத்திற்கு சென்று வலை விரித்து பின்னர் கரையில் இருந்து வலையை இழுத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நவீன படகுகள் வருகையால் பாரம்பரிய கரை வலை மீன்பிடி தொழிலையும் கைவிட்டு பைபர் படகு, விசைப்படகு என மாற்று மீன்பிடி தொழிலுக்கு சென்றனர்.