கன்னியாகுமரி:கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 2 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், தகுதி உடையவர்களின் வங்கிக் கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் கைபேசிக்கும் நிராகரிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை, சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள், மீண்டும் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறுஞ்செய்திகள் வராத ஏழை, எளிய பெண்கள் ஏராளமானவர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் இன்று (செப்.19) திரண்டனர். பணியில் இருந்த ஊழியர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர்.