கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக திறந்த நிலையில் கழிவு நீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது.
அப்பகுதி சுற்றுவட்டார குடியுருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. இந்நிலையில் கால்வாய் கடந்த ஏழாண்டுகளாக தூர்வாரப்படவில்லை.
இதன் காரணமாக கால்வாய் முழுவதும் சாக்கடை நீர் தேங்கியும், குப்பைகள் நிறைந்தும் சுகாதார கேடாக காணப்படுகிறது.
குறிப்பாக தோவாளை ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக இந்த கால்வாய் செல்வதால் ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுப்பகுதி முழுவதுமாக மிகவும் அசுத்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் தொற்று நோய்களை உண்டாக்கும் கொசுகள் உற்பத்தி செய்யும் இடமாக மாறி உள்ளது. கழிவு நீர் கால்வாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்கள்.