கன்னியாகுமரி:குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் உள்ளிட்ட நான்கு திணைகளை உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டத்தில் களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி ஆகிய ஐந்து வனச்சரகங்களைக் கொண்ட மலைப்பகுதிகளில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலப்பரப்பில் காடுகள் உள்ளன. இதில் கோதையாறு, அப்பர் கோதையாறு, மகேந்திரகிரி, அசம்பு, மாறாமலை, பாலமோர் போன்ற மலைப் பகுதிகள் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக கணக்கிடப்பட்டு உள்ளது.
அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் வருகையும் அதிகரிப்பதன் காரணமாக, அங்குள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கும் யானைகள் இடம் பெயர்ந்து கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, புளியங்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளுக்கும் வருகின்றன. இதனால் இப்பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக தெரிய வந்தது. சமீபத்தில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி 60க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கிய நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர்.