கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் மருத்துவமனை அமைத்து பணியாற்றி வந்தார். பின்னர், மருத்துவ சேவையை தவிர்த்து, துணிக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இவர் திமுக மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்தார்.
இவரது மனைவி சீதா, அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூலை 12ஆம் தேதி கரோனா தொடர்பான பணிக்குச் சென்று திரும்பிய மனைவி சீதாவை தனது காரில் வீட்டிற்கு அழைத்து சென்றபோது, வழியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிவராம பெருமாளின் வாகனத்தை தடுத்து நிறுத்தினார்.
காரில் இருந்து இறங்கிய சிவராம பெருமாள், அரசு மருத்துவமனையில் கோவிட்19 பணி முடிந்து டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் கூறினார். அதற்கு ஆங்கிலத்தில் தான் பேசுவாயா? தமிழில் பேச மாட்டாயா? என துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மருத்துவர் சிவராம பெருமாளையும், அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சிவராம பெருமாள் உறவினரும் வழக்கறிஞரான விஜய் ஆனந்த் என்பவருக்கும் சிவராம பெருமாளுக்கும் இடையே முன் பகை இருந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிவராம பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவராம பெருமாள், தன்னை மிரட்டிய துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், விஜய் ஆனந்த் இருவரும்தான் தனது மரணத்துக்கு காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்று (அக்டோபர் 26) தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.