கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட காட்டூர், ஜகதாம்பட்டி, மாலப்பட்டி, செக்கணம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர்களுக்கும் அதிகமாகப் பூக்கள் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் அரளி, செவ்வரளி, மல்லிகை, முல்லை, சாதிப் பூ, கனகாம்பரம், கோழிக்கொண்டை, ரோஜா ஆகியவை பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஏற்பட்டுள்ள கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், விளைச்சல் அதிகமாக இருந்தும் வருமானம் இல்லை என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், இங்கு விளையக்கூடிய பூக்கள் நாமக்கல், சேலம், கரூர் பூ மார்க்கெட்டுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அப்படி விற்பனை செய்யப்படும் மல்லிகை கிலோ 400 ரூபாய் முதல் விசேஷநாட்களில் ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும்.
தற்போது வியாபாரிகளின் விற்பனை சரிவர இல்லை என்பதால், பூக்களைக் கொண்டு ஊர் ஊராக விவசாயிகளே விற்பனை செய்து வருகின்றனர். அதாவது ஒரு டம்ளர் அல்லது ஒரு உழக்கு பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் என அடிமட்ட விலைக்கு பூக்கள் விற்கப்படுகின்றன.
இதனால், முறையான கூலி கிடைப்பதில்லை எனவும்; பூப்பறிக்க வருபவர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை எனவும் விவசாயிகள் மனம் வருந்துகின்றனர்.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு