சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் இந்நோய் தொற்றுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. இது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 14 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வைரஸ் தொற்று குமரி மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், சுற்றுலாத் தலங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றின் மூலமும் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் அதிகளவில் பரப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சுற்றுலாத் தலங்கள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்களுக்கு செல்வதைக் குறைத்துள்ளனர்.
எனவே சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து வெகுவாகக் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் கோடை சீசன் வேறு நெருங்கி வருவதால், மக்களிடையே உள்ள கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற அச்சத்தை நீக்கி விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வியாபாரிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பீதியால் வெறிச்சோடி காட்சியளிக்கும் கன்னியாகுமரி இதையும் பாருங்கள்:இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...