கன்னியாகுமரி மாவட்டம், மீனவக் கிராமங்களில் தான் கரோனா தொற்றானது அதிகளவு பரவி காணப்படுகிறது. முதலில் மார்த்தாண்டன்துறை மீனவக் கிராமத்தில் மீனவர் ஒருவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தூத்தூர், சின்னத்துறை, பூத்துறை, நீரோடி, ததேயபுரம் காலனி உள்ளிட்டப் பகுதிகளில் கரோனா வைரஸ் பாதிப்பானது அதிக அளவு ஏற்பட்டது. இதில் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கும் திரும்பினர்.
மேலும் இந்த கரோனா தொற்றானது மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கும் என்று சுகாதாரத்துறை சார்பில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள மக்களின் சளி மாதிரிகள் எடுத்துப் பரிசோதனை செய்ய முயன்றனர்.
அப்போது ஒரு சில நபர்கள் மட்டும் பரிசோதனை செய்ய ஒத்துக்கொண்ட நிலையில், சில ஊர்களில் தற்போது பரிசோதனையை மக்கள் முற்றிலும் புறக்கணித்து வருகின்றனர்.
எனவே, அவ்வப்போது ஒவ்வொரு ஊரிலும் சிலர் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அப்போது அவர்களுக்கு, அங்கு கரோனா பரிசோதனை செய்யும் போது கரோனா தொற்று இருப்பது உறுதியாகிறது. மேலும் கரோனா தொற்று கண்டறியப்படுபவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செல்லாமல் அடம்பிடித்து வருகின்றனர்.