வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி புயலாக வலுபெற்று இலங்கையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பரவலாக கனமழை முதல் அதிகனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கன்னியாகுமரி கடல்பகுதியில் சூறாவளி காற்று வீசிவருவதால் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்திவைத்துள்ளனர். மேலும் ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், மணக்குடி போன்ற கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நாட்டுப்படகு, வள்ளம், மீன்பிடி வலை போன்ற மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்புக் கருதி மேடான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.