அரபிக்கடலில் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை: கிடுகிடுவென உயரப்போகும் விலை... கன்னியாகுமரி: தமிழ்நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தடைகாலம் அடுத்த மாதம் 15 ஆம் தேதியோடு நிறைவடைய உள்ளது.
இதனால் சென்னை முதல் கன்னியாகுமரியின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வரை உள்ள விசைப்படகு மீனவர்கள் தடைகாலத்தை கடைபிடித்து வருகின்றனர். அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியான அரபி கடல் பகுதிகளில் இரவு 12 மணி முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் ,குளச்சல், தேங்காய்ப்பட்டணம், கேரளா உட்பட குஜராத் வரை உள்ள அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. மேலும் 61 நாட்களுக்கு விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடை காலம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் ஆகிய மீன் பிடி துறைமுகங்களில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 31 ஆம் தேதி மாலைக்குள் குமரி மாவட்டம் மீன்பிடி துறை முகங்களில் வந்து கரை சேர்ந்து, விசை படகுகளை சம்பந்தப்பட்ட மீன்பிடி துறைமுகத்தில் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் மீன் வளத்துறை அறிவித்து இருந்தது.
அதன் அடிப்படையில் முட்டம், குளச்சல், தேங்காய்ப்பட்டிணம் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்துவரும் 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன் பிடி துறைமுகங்களில் கரை ஒதுக்கி வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் அரபிக்கடல் பகுதிகளில் மீன் பிடி தடைகாலம் அமுலில் வருவதால், மீன்களின் விலை கடுமையான உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. ஆனால் இந்த விசைப்படகுகளை குளச்சல் துறைமுகத்தில் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள துறைமுகத்தில் சுமார் 30 முதல் 40 வரையிலான விசைப்படகுகளை மட்டுமே கட்ட முடியும். மீதி இருக்கும் விசைப்படகுகளை வெளியூர்களில் கொண்டு கட்ட வேண்டிய அவல நிலையில் மீனவர்கள் உள்ளனர்.
ஆகையால் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்து உரிய தங்குதளம் அமைத்து தருவதோடு விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கான ஏடுகளை இந்த துறைமுகத்தில் அமைத்து தர வேண்டுமென மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அரசு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி ஒரு சில ஆய்வு பணிகளை செய்வதோடு நின்று விடுகிறது.
அதன் பின்பு எந்த பணிகளையும் இதுவரையிலும் செய்யவில்லை. ஆகையால் தங்களது நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தர வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட் திருட்டு.. வெளியான சிசிடிவி