தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு...!

காஞ்சிபுரம் அருகே எடமச்சியில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் காவல் உதவி ஆய்வாளரை கல்லால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பி ஓடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு
தப்பி ஓடிய இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு

By

Published : Mar 26, 2022, 4:39 PM IST

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் ஒன்றியம் அருங்குன்றம் அருகே சாலவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் (45) என்பவர் கடந்த 22ஆம் தேதியன்று மதியம் சுமார் 2.30மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்குரிய 32 வயது மதிக்கத்தக்க இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் வழிமறித்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

இளைஞரின் சந்தேகத்திற்குரிய பேச்சு:அப்போது முன்னுக்கு பின் முரணாக அந்த இளைஞர் பதில் அளித்ததால் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்க காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் முடிவெடுத்ததையடுத்து, அவ்வழியாக வந்த தனியார் குவாரியின் லாரியை நிறுத்தி அதன் கிளீனரின் உதவியுடன் அந்த இளைஞரை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சாலவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை இயக்க நடுவில் அந்த சந்தேகத்திற்குரிய இளைஞரும், பின்னால் கிளீனரும் அமர்ந்திருந்தனர். மேலும் தனியார் குவாரியின் லாரி ஓட்டுநர் சந்தேகத்திற்கம்குரிய அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

இளைஞரின் வெறித்தனமான செயல்:இந்நிலையில் எடமச்சி அரசினர் மேல் நிலைப்பள்ளி அருகாமையில் சாலையில் இவர்கள் சென்றபோது, திடீரென காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரின் கழுத்தை பிடித்து நெறித்த அந்த இளைஞர் தான் பயணித்த இரு சக்கர வாகனத்தை விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதில் இரு சக்கர வாகனம் கீழே விழுந்ததும் அதில் நிலைதடுமாறி அனைவரும் விழுந்தபோது அங்கிருந்த கல்லை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரின் தலையில் அந்த இளைஞர் வெறி கொண்டு பலமாக தாக்கியதில் ரத்தம் கொட்டிய நிலையில், அவர் அந்த இளைஞருடன் 10 நிமிடங்களுக்கு மேலாக சண்டை போட்டுள்ளார்.

பின் ஒரு கட்டத்தில் தலையில் பலத்த காயமுற்றதால் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மயக்கமடைந்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தை இயங்கி வந்த தனியார் குவாரியின் லாரி ஓட்டுநரைத் தாக்கிவிட்டு அந்த இளைஞர் தப்பிச்சென்றார்.

அப்போது லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் பயந்து போய் செய்வதறியாமல் திகைத்து போய் இருந்தனர். பின்னர் இது குறித்து சாலவாக்கம் காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டதன் பேரில் சாலவாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் சேர்த்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வலைவீசி தேடிவரும் காவல்துறை:இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாலவாக்கம் காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தப்பியோடிய இளைஞரை வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் நடைபெற்ற தினத்தன்று சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளில், சந்தேகத்திற்குரிய நபரின் தோற்றம், இருசக்கர வாகனமும் ஒத்துப்போவது போல் இருந்ததால் தான் சந்தேகத்திற்குரிய அந்த இளைஞரை சாலவாக்கம் உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் வழிமறித்து விசாரணை மேற்கொண்டு, காவல் நிலையம் அழைத்து செல்லும் போது இச்சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினர் சார்பில் கூறப்படுகிறது.

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பியோடிய இளைஞரின் செயல் காவலர்கள் மத்தியிலும் ,பொது மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கணவரிடம் ரூ.8 கோடி மோசடி செய்த நபர் மீது காவல் ஆணையரிடம் மனைவி புகார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details