காஞ்சிபுரம்:தொடர் கனமழை காரணமாக செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3500 கன அடி நீர் செல்வதால் காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி-மாகரல் இடையே செய்யாற்றின் குறுக்கே உள்ள தற்காலிக தரைப்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல இன்று (நவ.14) தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழையால், ஏரிகள் நிறைந்த இம்மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே மாகரல் மற்றும் வெங்கச்சேரி இடையே செல்லும் செய்யாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தடுப்பணையைத் தாண்டி 3500 கன அடி நீர் பாய்ந்து ஓடுகிறது. மேலும், அப்பகுதியிலுள்ள செய்யாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டு வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தில் அடியில் வெள்ள நீர் வேகமாக செல்வதால், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பேருந்து, கார் போன்ற வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்ல மாகரல் வழியாக செல்ல வேண்டும் என்பதால், தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனம் வந்து செல்லும் நிலையில் தற்போது இந்தப் போக்குவரத்து தடையால் வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.