பெயர்: டி.ஆர்.பாலு
கட்சி : திமுக
வயது : 77
விட்டதை பிடித்தார் டிஆர் பாலு!
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் டிஆர் பாலு மூன்று லட்சத்து 64 ஆயிரத்து 955 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்பதுதான் டி.ஆர்.பாலுவின் முழுப் பெயர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் தான் இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, 1957ஆம் ஆண்டில் பாலு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் 1980களில் சென்னை மாவட்ட திமுக செயலாளராக உயர்ந்தார்.
சென்னையைத் திமுகவின் கோட்டையாக மாற்றியதில் டிஆர் பாலுவுக்கும் முக்கிய பங்கு உண்டு. கருணாநிதியால் கடந்த 1986ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். 1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து 4 முறை தென்சென்னை மக்களவைத் தொகுதியில் பாலு வெற்றி பெற்றார். 2009ஆம் ஆண்டு இத்தொகுதி மறுசீரமைக்கப்பட்டதன் காரணமாக, தென்சென்னை தொகுதியில் இருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் மாற்றப்பட்டன. இதனால் கடந்த 2009ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் பாலு போட்டியிட்டு, பாமக சார்பில் போட்டியிட்ட ஏகே மூர்த்தியை வீழ்த்தி 5ஆவது முறையாக எம்பியாக வெற்றிபெற்றார்.