காஞ்சிபுரம் ரயில்வே சாலையிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே அம்மா உணவகம் ஒன்று 2015ஆம் ஆண்டு சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு செயல்பட்டுவருகின்றது.
மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள், உறவினர்கள் அம்மா உணவகத்தில் காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் உணவு உண்பார்கள். உணவுகள் தரமாகவும் விலையும் மலிவாக வழங்கப்படுவதால் இந்த அம்மா உணவகத்தில் நாள்தோறும் கூட்டம் நிறைந்திருக்கும்.
இந்நிலையில் நேற்று (ஏப். 19) இரவு அம்மா உணவகத்தை மூடிவிட்டு அங்கு பணிபுரிபவர்கள் வீட்டிற்குக் கிளம்பிவிட்டனர். இன்று காலை பணிபுரியும் பெண் ஊழியர்கள் வந்து அம்மா உணவகத்தின் கதவை திறந்தபோது சுமார் 50 அடி நீளம் 22 அடி அகலத்திற்கு மேற்கூரையில் உள்ள பால் சீலிங் பெயர்ந்து விழுந்து மின் விளக்குகள், மின்விசிறிகள் சேதமானது கண்டு அதிர்ச்சியுற்றனர்.