தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும், தீநுண்மி பரவலைத் தடுக்கும்பொருட்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித் திரியும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வாகனங்களைப் பறிமுதல்செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை ஆறாயிரத்து 327 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு 6 ஆயிரத்து 640-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் நகரில் பறிமுதல்செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி தடையை மீறி சுற்றித்திரிந்த வாகனங்களை உரிமையாளர்களுக்குப் படிப்படியாக ஒப்படைக்குமாறு காவல் துறையினருக்கு அறிக்கை விடுத்திருந்தார்.