காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகரில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு வீட்டின் முன்பகுதியில் நகராட்சி ஊழியர்கள் மெட்டல் ஷீட் தடுப்பு அமைத்துள்ளனர். மேலும், யாரும் வசிக்காத வீட்டில் வெப்பநிலை பரிசோதனை செய்ததாக நகராட்சி தற்காலிக ஊழியர்கள் சுவரில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் காஞ்சிபுரம் நகராட்சியில் வேறொரு பகுதியில் வசிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யாருமே இல்லாத வீட்டினில் காஞ்சிபுரம் நகராட்சி ஊழியர்கள் தடுப்புகளை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்படும் ஒரு வீட்டிற்கு மெட்டல் ஷீட் அடிக்க 14 நாள்களுக்கு 8 ஆயிரம் என ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. யாருமே வசிக்காத வீட்டில் மெட்டல் சீட் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பணிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.