தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதர் புகழ் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருத்தேர் விழா - மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது காஞ்சி!

அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருத்தேர் விழா சிறப்பாக நடைபெற்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் விழாக்கோலமாக காட்சியளித்தது கோயில் நகரமான, காஞ்சிபுரம்.

அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருத்தேர் விழா - விழா கோலம் பூண்டது கோவில் நகரம்
அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருத்தேர் விழா - விழா கோலம் பூண்டது கோவில் நகரம்

By

Published : May 19, 2022, 3:58 PM IST

காஞ்சிபுரம்: உலகப்பிரசித்திப்பெற்ற, அத்தி வரதர் புகழ் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று பிரசித்திப்பெற்ற திருத்தேர் பவனி திரு வீதி விழாவையொட்டி 73 அடி உயரமும்,7 நிலைகள் கொண்ட பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உடைய திருத்தேரில் உற்சவர் வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா,வரதா வரதா,அத்தி வரதா" என பக்தி கரகோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்துச்செல்ல, நகரின் முக்கிய வீதிகளில் திரு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புகழ்பெற்ற கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த 2019ஆம் ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றபோது உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதன்பிறகு கரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

பிரம்மோற்சவத்தையொட்டி அனுதினமும் உற்சவர் வரதராஜப்பெருமாள் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிடப் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து நகரின் முக்கிய வீதிகளில், திரு வீதி உலா வந்து அருள்பாலித்தார்.
இந்நிலையில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று மிக முக்கிய உற்சவமும்,பிரசித்திப்பெற்ற திருத்தேர் பவனி திரு வீதி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதனையொட்டி கோயில் வாகன மண்டபத்தில் உற்சவர் வரதராஜப்பெருமாள் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டு உடுத்தி தங்க,வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காந்தி ரோடு தேரடி பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருந்த 73 அடி உயரமும், 7 நிலைகளும் கொண்ட பல அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உடைய திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு பச்சைக்கொடி காட்டி அதிர்வெட்டுகள் வெடிக்க,மேளதாளங்கள் முழங்க, பஜனைப்பாடல்கள் ஒலிக்க காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி எழிலரசன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.சத்யப்பிரியா, காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதாகர் உள்ளிட்டோர் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா, வரதா வரதா, அத்தி வரதா" என விண்ணைப் பிளக்கும் பக்தி கரகோசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்ல நகரின் முக்கிய வீதிகளில் திரு வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அத்தி வரதர் புகழ் ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ திருத்தேர் விழா - பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் விழா கோலம் போல் காட்சியளித்த கோவில் நகரம்

வழியெங்கும் பக்தர்கள் பூ, தேங்காய், பழங்கள் வைத்து கற்பூர தீபாராதனைகளை சமர்ப்பித்து வரதரை சாமி தரிசனம் செய்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் வரதர் திருத்தேரில் திரு வீதி உலா வந்து கோயில் நகரமான காஞ்சிபுரமே விழாக்கோலம் போல் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானமும், நீர் மோர், பானகங்களும் வழங்கப்பட்டன.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பண மழை பொழிய வேண்டாம்- சீடர்களுக்கு நித்யானந்தா வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details