தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடகலையா... தென்கலையா... ஐயங்கார்களுக்கிடையே தொடரும் சிக்கல்! பக்தர்கள் கவலை

காஞ்சிபுரம்: அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவு ஐயங்கார்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

fight-between-iyengar-community-in-kancheepuram-varadhrajar-perumal-temple

By

Published : Nov 6, 2019, 11:36 AM IST

Updated : Nov 6, 2019, 12:25 PM IST

உலகப் பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என அழைக்கப்படும் தேவராஜ சுவாமி கோயிலில் இன்று பூதத்தாழ்வார் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றது.

இதையொட்டி தேவராஜசுவாமிக்கு சிறப்பு ஆராதனை, அலங்காரங்கள் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள பூதத்தாழ்வார் சன்னதியில் எழுந்தருளினார். பூதத்தாழ்வார் சாத்துமுறை உற்சவம் நடைபெற்றபோது உற்சவ மூர்த்திகள் முன்பு தென்கலை ஐயங்கார்கள் பிரபந்தங்களைப் பாட முயற்சித்தனர். அப்பொழுது வடகலை ஐயங்கார்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி பிரபந்தங்களை பாடக்கூடாது எனத் தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர், காஞ்சிபுரம் வட்டாட்சியர், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இரு பிரிவினரிடையே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்குவாதம் நீடித்தது.

ஐயங்கார்களுக்கு இடையே பிரபந்தம் பாடுவதில் ஏற்பட்ட தகராறு

இருதரப்பினரும் பிரபந்தங்களைப் பாட வேண்டாம் எனக் காவல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டும், ஐயங்கார்கள் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு நிற்காமல், இருதரப்பு ஐயங்கார்களும் போட்டிப்போட்டுக் கொண்டு பிரபந்தங்களை ஆவேசமாகப் பாடி சாமியை வழிபட்டனர்.

பூதத்தாழ்வார் சாத்துமுறை மட்டுமின்றி ஒவ்வொரு ஆழ்வார்களின் சாத்துமுறை உற்சவத்தின்போதும் வடகலை, தென்கலை ஐயங்கார்களுக்கிடையே பிரபந்தங்கள் பாடுவதில் தகராறு ஏற்படுவது தொடர்ந்து வாடிக்கையாகிவருகிறது. உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ஐயங்கார்கள் ஒவ்வொரு உற்சவத்தின்போதும் தொடர்ந்து தகராறில் ஈடுபடுவது பக்தர்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: பிரம்மோற்சவ விழாவில் கைகலப்பில் ஈடுபட்ட ஐயங்கார்கள்

Last Updated : Nov 6, 2019, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details