காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பிடாரி கோயிலுக்கு செல்லும் வழியில், தலைகள் மட்டுமே தெரிந்தபடி மண்ணில் புதைந்துகிடந்த சிலையை, ஊர் பொதுமக்கள் முன்பு மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன், அந்த கிராமத்திற்கு விரைந்து சிலையை ஆய்வு செய்தார்.
அப்போது அந்த சிலை 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கொற்றவைஆதன் கூறுகையில், "இந்த சிலை 1200 ஆண்டுகள் பழமையும், நந்திவர்ம பல்லவனின் குலதெய்வுமான 'மூத்த தேவி' சிலை என்பதை உறுதிசெய்துள்ளோம்.
இதற்கு ஜேஷ்டாதேவி என்ற பெயரும் உண்டு. 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் வகையில் சிறப்பான வேலைப்பாடுகள் மூலம் ஆபரணங்களும், ஆடைகளுடன் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட தனது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் மகள் மாந்தியின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.