சென்னை:கள்ளக்குறிச்சியில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் நாரிஷ்வரன் என்ற சிவன் கோயிலில் இருந்து ஆறு உலோக சிலைகள் 1960ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சிலைகளை தேடும் பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த ராஜேந்திர சோழனின் ஒன்பது வெண்கல சிலைகளை இந்தோ பிரெஞ்ச் நிறுவனம் ஆவணப்படுத்தியதை அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
அது தொடர்பான விவரங்களை கடிதம் மூலம் அனுப்பி ஆவணங்களை ஆய்வு செய்தபோது சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி அளித்துள்ளது. குறிப்பாக நடராஜர் சிலை, திரிபுராந்தக சிலை, திரிபுரசுந்தரி சிலை, வீணா தாரா தட்சிணாமூர்த்தி சிலை, சுந்தரர் மற்றும் அவரது மனைவி பரவை நாச்சியார் சிலை ஆகிய புகைப்படங்களை அளித்தது.
இதனை அடிப்படையாக வைத்து சிலை ஆர்வலர்கள், சிலை சேகரிப்பாளர்கள் ஆகியோரிடமும் குறிப்பாக விஜயகுமார் என்ற சிலை ஆர்வலர் உடன் சேர்ந்து இணையதளத்தில் தேடுதலில் ஈடுபட்டனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ‘freer sackler music of art’ என்று அருங்காட்சியத்தின் இணையதளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, இரண்டாம் உலகப் போர் ஆவண ஆதாரங்களை வைத்து 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் மற்றும் மனைவி பரவை நாச்சியார் சிலை அருங்காட்சியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதை கண்டுபிடித்தனர். இந்த சிலைகள் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் இதேபோன்று ஆய்வு மேற்கொண்டதில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டின் ஏல நிறுவனத்தில் கடந்த 23ஆம் ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய நடராஜர் சிலையும், கடந்த 2013 ஆம் ஆண்டு பத்தாம் மற்றும் பதினோராம் நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த சுமார் நான்கு லட்சம் முதல் 6 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய வீனாதாரா தட்சிணாமூர்த்தி சிலையும் ஏலத்தில் வாங்கப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோன்று அமெரிக்காவில் ஓஹீயோ என்ற இடத்தில் க்ளீவ்லாண்ட் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் திரிபுராந்தகம் சிலை மற்றும் திரிபுரசுந்தரி சிலை ஆகியவை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு சிலைகளின் புகைப்படத்தை கும்பகோணம் நீதிமன்ற கூடுதல் தலைமை நடுவர் மூலம், சென்னையில் உள்ள தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
ஆய்வு மேற்கொண்டதில் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புடைய சிலைகள் என்பது உறுதியானது. இதனையடுத்து இந்திய அமெரிக்க பரஸ்பர குற்றவியல் பரஸ்பர சட்ட உதவி அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மத்திய அரசின் மூலம் அமெரிக்க அரசிற்கு ஆறு சிலைகளையும் மீட்பதற்கான கடிதத்தை அனுப்பி உள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்ற முதியவர்... கைது செய்த போலீசார்...