கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காரணமாக அச்சக உரிமையாளர்கள், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிரண்குராலா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு, வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது, குழுவாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பட்டாசு பொருள்களையோ வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. தேர்தல் பரப்புரை முடிவடையும் நாளான ஏப்ரல் 4 அன்று வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் தொடர்பாக வந்து தங்கி இருப்பவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றிட வேண்டும்.
திருமணம் மற்றும் சுபநிகழ்வுகள் நடைபெறும் போது அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைத்து வாக்கு சேகரிக்கக் கூடாது போன்ற பல்வேறு தேர்தல் நடத்தை விதிகளை மாவட்ட ஆட்சியர் விளக்கினார்.