ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தது. காவல் துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சேலம் மாவட்டம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் பன்னிமடை குடியைச் சேர்ந்த வடிவேல் மகன் அஜித் (21) என்பதும், சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் அவர் இருக்கிறார் என்பதும், அப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையாததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர்களை அழைத்து காவல் துறையினர் விசாரித்தனர்.
அப்போது கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரிபுரம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குப்புசாமி மகன் காமராஜ் (34) என்பவருக்கு 17 வயது மட்டுமே ஆன அச்சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது தெரிந்தது. இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக குடும்பம் நடத்தி வந்த அவர்கள் ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு கோவில்பாளையம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.