ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து குழு கடன் பெற்றுள்ளனர். இந்தக் கடனை தவராமல் வாராவாரம் செலுத்தி வந்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தை சந்தித்து வந்த தொழிலாளர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவந்தனர். பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், ஆகஸ்ட் மாதம் வரை மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் கிராமத்தில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் இன்று (ஜூலை29) காலை கடன் வசூலில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை சிறைபிடித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பவானிசாகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரிடம் தற்காலிகமாக கடன் வசூல் செய்வதை நிறுத்தி வைக்குமாறு கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.