ஈரோடு:அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்த கருப்பன் ஆண்யானை அங்கு சாகுபடி செய்த வாழை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து இரவு நேரம் காவலுக்கு சென்ற இரு விவசாயிகளை கருப்பன் யானை தாக்கி கொன்றது.
கருப்பன் யானையின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால் விவசாயம் செய்யமுடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் கருப்பன் யானையை பிடிக்க விவசாயிகள் வனத்துறையினருக்கு வலியுறுத்தி வந்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி ஆபரேஷன் கருப்பு என்ற பெயரில் முத்து, கபில்தேவ் மற்றும் கலீம் ஆகிய 3 கும்கி யானைகள் மூலம் கருப்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் கருப்பன் யானைக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தியும் யானை மயங்காமல் காட்டுக்குள் தப்பியோடியது. இதனால் ஆபரேஷன் கருப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 16 நாள்களாக கருப்பன் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறை திணறியதால் கும்கிகள் மீண்டும் அந்தந்த முகாமுக்கு கொண்டு செல்வதற்கான பணிகளை வனத்துறையினர் எடுத்துள்ளனர்.