கடலூர் மாவட்டத்தில் உள்ள வீ.சித்தேரியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி, சின்னபொண்ணு தம்பதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஈரோட்டிலுள்ள கேபிள் பதிக்கும் ஒப்பந்ததாரரிடம் தினக்கூலிக்கு மாடாய் உழைத்து, மூத்த மகன் துரைராஜை பட்டயப் படிப்பு படிக்க வைத்த இத்தம்பதி, இளைய மகள் சத்யாதேவிக்கும் கல்வி பசியாற்ற விரும்பியுள்ளனர். மகளை நயினார் பாளையத்திலிருக்கும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தனர். விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட சத்யா, மேல்நிலை வகுப்பில் அக்ரி பாடப்பிரிவில் முழு விருப்பத்துடன் பயின்றுள்ளார். படிப்பில் சுட்டியான அவர், விரும்பிய பாடம் என்பதால் அசால்டாக 382 மதிப்பெண்கள் எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்.
லட்சிய கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல நினைத்த சத்யாவிற்கோ, மேற்படிப்பைத் தொடர முறையான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. பெற்றோர் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிவதால் தானும் அங்கேயே கல்லூரிப் படிப்பை தொடரலாம் என முடிவு செய்தார். அரசு உதவி பெறும் கலைக்கல்லூரியில் ஆசை ஆசையாய் தான் விரும்பிய பாடப்பிரிவை தேர்வு செய்ய சென்ற சத்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தக் கல்லூரியில் அக்ரி பாடப் பிரிவு இல்லை. மாணவி சத்யாவை மூளைச்சலவை செய்த கல்லூரி நிர்வாகம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் சுயநிதி பயோ கெமிஸ்ட்ரி பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க அறிவுறுத்தியுள்ளது.
கல்வி கனவை தனது சிறகுகளில் தூக்கிச் சுமந்த சத்யா, நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் சுயநிதி பயோ கெமிஸ்ட்ரி பாடப் பிரிவில் சேர்ந்துள்ளார். கல்விதான் முன்னேற்றத்துக்கான வழி என்பதை புரிந்துக்கொண்டு முதல் பருவத் தேர்வை எழுதிவிட்டு, அதன் முடிவுகளுக்காக காத்திருந்தார் சத்யா. ஆனால் கல்லூரி நிர்வாகம் தேர்வு முடிவுகளுடன், சத்யாவின் கல்லூரி படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.