ஈரோடு:மாநிலத்தின் இரண்டாவது பெரிய சந்தையான புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தையில் ஒரே நாளில் 2000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் - கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜனவரி 19) புஞ்சைபுளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 40 எருமைகள், 500 கலப்பின மாடுகள், 350 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள், கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். எருமைகள் 36 ஆயிரம் ரூபாய், கறுப்பு வெள்ளை மாடு 48 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 53 ஆயிரம் ரூபாய், சிந்து 40 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு 74 ஆயிரம் ரூபாய், வளர்ப்பு கன்றுகள் 14 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
அதேபோல் ஆட்டுக்குட்டி ரூபாய் இரண்டாயிரம் முதல் நான்காயிரம் வரையிலும், வெள்ளாடுகள் ஆறாயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் ஐந்தாயிரம் முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை போயின.
சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். மார்கழி மாதம் ஆடுகள் விற்பனை மந்தமான நிலையில் தற்போது தைப்பொங்கல் பண்டிகை முடிந்து ஆடுகள் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: '10 வருஷமா இருந்தீங்களே நன்னிலத்துல அதச் செஞ்சீங்களா காமராஜ்?'