ஈரோடு:மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆறாவது நினைவு நாள் நேற்று (ஜூலை 27) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பசுமை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் நாஞ்சில் விஜயன், நடிகை தீபா கலந்து கொண்டு மரம் நட்டனர்.
பசுமை இயக்கம் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி 5 லட்சம் மரக்கன்றுகள்
மரம் நடும் நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பசுமை இயக்க அமைப்பு தேசியத் தலைவர் சிவக்குமார் கூறுகையில், "பசுமை இயக்கம் சார்பில் அப்துல்கலாம் உயிர்த்தெழுகிறார் என்ற நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் கிராமங்கள்தோறும் கிராம தலைவர்கள் அளித்த நிலங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரிய அளவில் சமூக காடுகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆக்ஸிஜனும் அதிக அளவு கிடைக்கும்.
ஒரு விதை புரட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி மரக்கன்றுகளுக்கு பெயரிட்டு அதை வளர்க்கும் முறையை அமல்படுத்த உள்ளோம்" என்று கூறினார். இந்த நிகழ்வில் பசுமை இயக்கத்தினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நெல் மணிகளால் அப்துல் கலாம் ஓவியம் வரைந்த மாணவர்!