தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயக் கடன் பெறுவதில் புதிய உத்தரவை நவ. 1 வரை நிறுத்திவைக்க உத்தரவு

சென்னை: விவசாயக் கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமே பெற வேண்டும் என்ற கூட்டுறவு சங்கப் பதிவாளரின் உத்தரவை நவம்பர் 1ஆம் தேதிவரை நிறுத்திவைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய கடன் பெறுவதில் புதிய உத்தரவை நவம்பர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
விவசாய கடன் பெறுவதில் புதிய உத்தரவை நவம்பர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Aug 29, 2020, 12:46 AM IST

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுவந்த நகைக்கடன், விவசாயக் கடன்களை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே பெற வேண்டும் எனவும், ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், கடந்த ஜூலை 7 ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் புதிய நடைமுறை காரணமாக, விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் எனவும், நூறு கிலோமீட்டர் தூரம் சென்று மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு செல்லக்கூடிய நிலைமை ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறையில் அனுபவம் இல்லை என்பதால், இந்த நடைமுறைக்குத் தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், மத்திய அரசின் மானிய தொகைகள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே செலுத்தப்படுவதால், நபார்டு வங்கி அறிவுரைப்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு கடன் தொகைகள் சென்றடையவும், இடைத்தரகர்களைத் தவிர்க்க இந்தப் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பருவமழை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாகப் பெற முடியாது என்பதால், இந்தப் புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details