தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான சாம்ராஜ்நகர் மாவட்டம், சொர்ணாவதி அணை அருகே சரக்குவாகனத்தில் கடத்தப்பட்ட ரூ.2.80 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தையொட்டிய மாவட்டம் என்பதால் இரு மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.
தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் சொர்ணாவதி அணையையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாண்டியாவில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஆட்டோவில் இருந்து நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடினர். அதில் மாண்டியாவைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து கர்நாடக காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் மொத்தம் 2.80 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் ரூ.2.8 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்! இது தொடர்பாக பிடிபட்ட கார்த்தியிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடகாவிலிருந்து வரும் வாகனைங்களை தீவிரமாக தமிழ்நாடு காவல் துறை பரிசோதித்த பின்பு தான் தமிழ்நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.