தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தியூர் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு! பொதுமக்கள் சிரமம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலையின் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் குப்பைகளைக் கொட்டியதோடு, தீ வைத்ததால் அப்பகுதி மக்களும், அவ்வழியே செல்லும் பாதசாரிகளும் புகைமூட்டத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.!

kopisettipalayam

By

Published : Mar 12, 2019, 2:47 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகிலிருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலையில், தனியார் மகளிர் கலைக்கல்லூரி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன.

அந்தப் பகுதியில் குடியிருப்பு வீடுகளும், வணிகக்கடைகளும் அதிகளவு உள்ளன. மேலும், கோபிசெட்டிபாளையத்திலிருந்து அத்தாணி வழியாக அந்தியூர் மேட்டூர் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் இது அமைந்துள்ளது.

இந்நிலையில், இந்த சாலையில் உள்ள கமலா ரைஸ்மில் அருகில் அடையாளம் தெரியாத பேக்கரி உரிமையாளர்கள் சிலர், இரவு நேரத்தில் பேக்கரி கழிவுகளான ரொட்டி பிஸ்கட், அழுகியப் பழங்கள், பாட்டில்கள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி கப்புகள் என ஏராளமான கழிவுப்பொருட்களை கொட்டிச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ள நிலையில் நேற்று (மார்ச்.11) இரவு பேக்கரிக் கழிவுகளை கொட்டிய அடையாளம் தெரியாத நபர்கள் குப்பைக்கு தீ வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் நள்ளிரவிலிருந்து குப்பையில் எரிந்த தீயினால் காலை முதல் புகைமூட்டம் ஏற்பட்டு வாகனங்களும் பொதுமக்களும் செல்லமுடியாத அளவிற்கு சாலையை மறித்து புகை பரவியது. இப்புகையினால் துர்நாற்றமும் வீசுகிறது.

இவ்வழியாக செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் செல்லமுடியாமல் அவதியுற்று வருகின்றனர். கோபிசெட்டிபாளையத்திலிருந்து அந்தியூர் செல்லும் அரசுப்பேருந்து, இதர வாகனங்களின் வாகன ஓட்டிகள் சாலை தெரியாமல் அவ்விடத்தில் வந்தவுடன் பிரேக் பிடித்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர். மேலும், கூகலூர், நஞ்சைகோபி, அத்தாணி வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கோபி நகரத்துக்கு வரும் பொதுமக்களும் கடும் அவதியடைந்துள்ளனர்.

இப்புகையினால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள்களின் வீடுகளில் புகை பரவி வருவதால், குழந்தைகள் முதியவர்கள் புகையைத் தாக்குபிடிக்கமுடியாமல் அவதியுற்றுவருகின்றனர்.

இதனால் பேக்கரி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும், குப்பைகழிவுகளுக்கு தீ வைப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் இப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்யவேண்டும் என்றும் அனைத்து தரப்பிரனரும் வேண்டுகோள்-வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details