ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் ஒரு நபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பவானிசாகர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சத்தியமங்கலம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (55) என்பது தெரியவந்தது. இவர் தனது மனைவியின் தங்கை கணவரான காராச்சிக்கொரைமேடு பகுதியைச் சேர்ந்த மாரி (45) என்பவருடன் சேர்ந்து நேற்று (அக்.11) இரவு கொத்தமங்கலத்தில் உள்ள மாரியின் குடிசை வீட்டிற்குச் சென்று இருவரும் மது அருந்தினர். பின் போதை தலைக்கு ஏறியதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, முருகனை செங்கலால் அடித்துக் கொன்றது தெரியவந்தது.