தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மஞ்சள் விலை சரிவு - விவசாயிகள் வேதனை!

ஈரோடு: மஞ்சளுக்கான விலையை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்திட வேண்டும் என மஞ்சள் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : Jul 22, 2020, 6:56 PM IST

மஞ்சள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை
மஞ்சள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை

உலகளவில் மருத்துவக் குணம் கொண்ட மஞ்சள் உற்பத்தியில் ஈரோடு முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. எனவே வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் ஈரோட்டிற்கு வந்து மஞ்சளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது வெளிமாநிலங்களில் உள்ள விவசாயிகளும் ஈரோடு விதை மஞ்சள் வாங்கிச் சென்று தங்களது மாநிலங்களில் விளைச்சல் மேற்கொண்டனர் என்றபோதிலும் ஈரோட்டைப் போன்ற தரமான மருத்துவக் குணம் கொண்ட மஞ்சளை உற்பத்தி செய்திட அவர்களால் முடியவில்லை.

மஞ்சள் விலை சரிவால் விவசாயிகள் வேதனை

இந்நிலையில் ஈரோட்டில் மஞ்சளுக்கான நல்ல விலை கிடைக்காமல் அதன் வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தரமான மஞ்சளை உற்பத்தி செய்தும் அதற்கான விலை கிடைக்காததால் மாற்றுப் பயிரைத் தேடிச் செல்லும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த மஞ்சள் சந்தைகளை மீண்டும் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கரோனாவுக்கு முந்தைய விலை கூட கிடைக்காமல் மஞ்சள் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இதுகுறித்து மஞ்சள் விவசாயிகள் கூறுகையில், "கரோனாவுக்கு முன்னர் மஞ்சள் ஒரு குவிண்டால் 6 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கரோனாவுக்குப் பின்னர் சந்தையில் ஒரு குவிண்டாலுக்கு 1000 ரூபாய் குறைந்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சளுக்கான உற்பத்தி செலவு ஒரு குவிண்டாலுக்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய்வரை ஆகிறது. எனவே எங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்வரை நஷ்டத்தில் மஞ்சளை விற்பனை செய்திடும் மோசமான நிலை உருவாகியுள்ளது. அரசு மஞ்சள் விவசாயிகளைப் பாதுகாத்திட குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும்.

மஞ்சளைப் பாதுகாத்து வைத்திடவும், தரமானதாக சேமித்திட வைத்திடவும் மானியத்துடன் கூடிய குளிர்பதனக் கிடங்குகளை அமைத்திட அரசு உதவிட வேண்டும். அதேபோல் ஏனைய மாநிலங்களில் விவசாய விளைப் பொருள்களுக்கு சந்தைக் கட்டணத்தை ரத்து செய்துள்ளதைப்போல் தமிழ்நாட்டிலும் விவசாய விளைப் பொருள்களுக்கு சந்தைக் கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மஞ்சளுக்கான சந்தைக் கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பயிர் காப்பீட்டு தொகையில் அலுவலர்கள் ஊழல்: விவசாயிகள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details