ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, புலி, யானை ஆகியவை அதிகளவில் உள்ளன. தற்போது உணவு தேடி வனவிலங்குகள் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து வனவிலங்குகளை அடித்துக் கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க வனத்துறையினர் வனவிலங்குகளின் கால் தடங்களை வைத்து, எந்தப் பகுதி வழியாக வருகிறது என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது சிறுத்தை, புலி ஆகியவை சாலையில் நடமாடும் வீடியோவை அப்பகுதி மக்கள் வெளியிட்டுள்ளனர். மைசூரில் இருந்து காரில் வந்த நான்கு பேர் தாளவாடி வழியாக, நெய்தாளபுரம் சென்று கொண்டிருந்தனர். இரவு 10 மணி அளவில் சிக்கள்ளி பாலத்தை அடுத்துள்ள வேகத்தடையைத் தாண்டுவதற்கு காரை மெதுவாக இயக்கியபோது, எதிரே புலி தென்பட்டது. இந்த புலி வனச்சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஒய்யார நடைபோட்டபடி, உலா வந்ததால் காருக்குள் இருந்த நபர்கள் அச்சத்தில் உறைந்துபோனார்கள்.