ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த பேருந்து நிலைய வளாகம், தற்போது மதுபோதை ஆசாமிகளின் கூடாரமாக மாறியுள்ளது. பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் ஆசாமிகள், போதையில் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிவதோடு பயணிகள் அமரும் பகுதியில் உறங்குகின்றனர்.
பேருந்து நிலையத்தில் உறங்கும் மதுபோதை ஆசாமிகளால் பயணிகள் அச்சம்!
ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் மதுபோதை ஆசாமிகள் பகல் நேரங்களில் உறங்குவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால், இங்கு அமர்வதை பயணிகள் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், போதை ஆசாமிகளால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என அச்சமடைகின்றனர். மேலும், கர்ப்பிணிகள் இளைப்பாறும் இடத்திலும் போதை ஆசாமிகள் உறங்குவதால், அவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என பேருந்து நிலைய வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பேருந்து நிலைய வளாகத்தில் உறங்கும் போதை ஆசாமிகள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.