ஈரோடு: புன்செய்ப்புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தை இதுவாகும்.
புன்செய்ப்புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள்.
புன்செய்ப்புளியம்பட்டி கால்நடை சந்தை இந்த நிலையில் இன்று (செப்.30) புன்செய்ப்புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு 50 எருமைகள், 650 கலப்பின மாடுகள், 300 ஜெர்சி மாடுகள், 100 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வந்திருந்தனர்.
ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். சிந்து 15 ஆயிரத்துக்கும் 40 ஆயிரம், எருமைகள் 36 ஆயிரம் ரூபாய்க்கும், கறுப்பு வெள்ளை மாடு 48 ஆயிரம் ரூபாய்க்கும், ஜெர்சி 53 ஆயிரத்துக்கும்,76 ஆயிரம் ரூபாய் வரை வளர்ப்பு கன்றுகள் 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.
சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகின. மழை காரணமாக கால்நடை தீவனத்துக்கு பிரச்சினை இருக்காது. இதனால் கறவை மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு மாடுகளை வாங்கி செல்வதாகவும், கடந்த வாரத்தை விட, இந்தவாரம் மாடுகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரங்களில் விற்பனை மந்தமான நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால், கறவை மாடுகள் விற்பனை சூடு பிடித்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:என்ன செய்ய...இப்ப நான் என்ன செய்ய - அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்