'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற தலைப்பில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கோவை சந்திப்பில் இன்று (ஜன. 06) பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, "பவானிசாகர் பகுதியில் 12 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தியவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
சத்தியமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரூ.7.5 கோடியில் கட்டடம் கொடுத்தது அதிமுக. சத்தியமங்கலத்திலிருந்து பவானி மற்றும் மேட்டுப்பாளையத்திற்குச் சாலைகள், அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ.1,626 கோடி செலவில் செயல்படுத்தப்படுவதால், பவானிசாகர் தொகுதியில் 32 குளங்களில் நீர் நிரப்பப்படும். திமுக மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஏமாற்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்தில் பெற்ற மனுக்களுக்குப் பதிலளிக்குமா? திமுக வெற்றி பெற்றபின் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஸ்டாலினும், அழகிரியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள்தான். அழகிரிக்கே கட்சியில் வாய்ப்பு அளிக்காமல் உள்ளவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதன் சேர்மேன் தற்போது ஸ்டாலின், பின்னர் உதயநிதி ஸ்டாலின். ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்தபோது, விவசாயிகளின் பம்பு கட்டணம் குறைக்கப் போராடியபோது, விவசாயிகளைச் சுட்டுக் கொன்றவர்கள் திமுக. திமுகவில் உள்ள அனைவரும் ரவுடிகள். நமது (அதிமுக) கட்சியில் உள்ளவர்கள் உண்மையில் விவசாயிகள்.