ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையையும் இந்த அணை பூர்த்தி செய்துவருகிறது.
பவானிசாகர் அணையின் நீர் இருப்பு குறைவால் விவசாயிகள் கவலை
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதால் திருப்பூர், கரூர் மாவட்டங்களின் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா, நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் மாயாற்றின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து கணிசமாக உயர்ந்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 97.86 அடியாகவும், நீர் இருப்பு 27 டிஎம்சியாகவும் இருந்ததால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது.
ஆனால் இந்தாண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் அணையின் நீர்வரத்து குறைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்வரத்தும் குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, இன்றைய நிலவரப்படி 62.45 அடியாகவும், நீர் இருப்பு 8.1 டிஎம்சியாகவும், நீர் வரத்து 577 கனஅடியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், போதிய நீர் இருப்பு இல்லாததால்இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.