தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2020, 9:35 AM IST

ETV Bharat / state

ஈரோட்டில் பன்றித் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!

ஈரோடு: பெருந்துறை அருகே சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றியபடி பன்றித் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

arrest
arrest

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் வளாகம் அருகே பாலியர் காட்டூரில் தங்கவேல் என்பவர் பண்ணை அமைத்து பன்றிகளை இறைச்சிக்காக வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்தப் பன்றிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு இரவு நேரத்தில் அடைக்கப்படும் பன்றிக் குட்டிகளை, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து திருடிச் செல்வதாகத் தெரிகிறது. இதுகுறித்து தங்கவேல் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனிடையே தொடர் திருட்டைத் தடுத்திடும் வகையில் பன்றிப் பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து இன்று காலை பண்ணைக்கு வந்த தங்கவேல் பன்றிக்குட்டிகள் குறைந்திருப்பதைக் கண்டு, பெருந்துறை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிரவு வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பன்றிப் பண்ணைக்குள் நுழைந்து பத்துக்கும் மேற்பட்ட பன்றிக் குட்டிகளை எடுத்துச் சென்றுள்ளதும், இவர்கள்தான் பண்ணையில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு பன்றிக் குட்டிகளை திருடிச் சென்றவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். சிப்காட் வளாகத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றியபடி, இரவு நேரத்தில் தொடர்ந்து பன்றிக் குட்டிகளைத் திருடி வந்த திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த மணிகண்டன், மகேந்திரகுமார், திருவண்ணாமலையைச் சேர்ந்த காசிநாதன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கவேல் பண்ணையில் 30-க்கும் மேற்பட்ட பன்றிக் குட்டிகளைத் திருடி அவற்றை விற்பனை செய்து வந்ததாகவும், தொடர் பன்றித் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவரிடமிருந்தும் ஆறு பன்றிக் குட்டிகளையும், 20 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details