ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதலில் 100 மையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போடப்பட்டு வந்தன. இந்தநிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
66 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் ஏழு நாள்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 13,400 கோவிஷீல்டு தடுப்பூசி வந்ததையடுத்து கடந்த 13, 14 ஆம் தேதியிலிருந்து மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.