தமிழ்நாட்டில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல்வேறு இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துள்ளது.
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தண்ணீர் திறப்பு: பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை!
திண்டுக்கல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் தண்ணீர் திறக்கப்படுவதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி, தனது முழுக் கொள்ளளவை எட்டியதால், ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் செய்வதற்காக சென்ற வாரம் 1 அடியில் இருந்த இரும்புத் தடுப்பு திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று(செப்.02) மாலையிலிருந்து ஏரியில் 1.50 அடி அளவு நீர் வெளியேற்றப்பட்டிருப்பதால் தெரசா நகர், டோபி கானல், பெர்ன்ஹில் ரோடு, குறிஞ்சி நகர் உள்ளிட்டப் பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.