திண்டுக்கல்: ஸ்டாலின் குறித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மேடையில் பேசியது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம் ஜனவரி 23 அன்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்தூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பரமசிவம் பேசுகையில், “அதிமுகவை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்போம். இந்தத் தேர்தலில் அதிமுக ஹேட்ரிக் சாதனை படைக்க வேண்டும். ஸ்டாலின் ஒரு மதவாதி. கிறிஸ்துமஸ், ரமலானுக்கு வாழ்த்து சொல்கிறவர், விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு சொல்வதில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இதை மேடையில் கேட்டுக்கொண்டிருந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சியாகி, பரமசிவத்தை பார்த்து மாற்றி சொல்லுமாறு கூறினார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் பேச்சு இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட பரமசிவம், வரலாற்று பிழை இழைத்துவிட்டேன். எனது வாயை பீட்டாடின் அல்லது ஃபினாயில் கொண்டு கழுவ வேண்டும் என மேடையிலேயே பேசினார். இதனால் அந்தக் கூட்டத்தில் சிறிது நேரம் கலகலப்பு ஏற்பட்டது.
இதுபோல் ஒவ்வொரு முறையும் பொதுக் கூட்டங்களில் எதையாவது உளறுவதையே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால் இம்முறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் தவறுதலாக பேசிவிட அது இணைய பக்கங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.