திண்டுக்கல்: தேனி பெரியகுளம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் கடந்த 15 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். மேலும் சட்ட உரிமை கழக தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இன்று (டிச.14) அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப்பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தில் பயணிகள் இருக்கைகள், ஜன்னல் கண்ணாடி கதவுகள், ஓட்டுநர் இருக்கை, வண்டியில் உள்ளே உள்ள நடைபாதை பிளாட்பாரம், மேற்கூரை, வண்டி ஸ்டேரிங், ஆக்சிலேட்டர், போன்றவை பழுதடைந்துள்ளதாகவும்; மழை பெய்தால் மேற்கூரை வழியாக தண்ணீர் ஒழுகுவதாகவும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் திட்டுவதாகவும், அரசுப்பேருந்து முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளதாகவும் மிகவும் சிரமப்பட்டு வண்டியை திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை ஓட்டி வந்து பயணிகளை இறக்கிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த முருகேசன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுவதற்கு தகுதி இல்லாத பேருந்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி வந்தார்.