திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, செம்பட்டி, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதிகாலையில் பூக்கள் பறிக்கப்பட்டு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பூ சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து வியாபாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த மாதம் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்த நிலையில் இன்று பூக்களின் விலை திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.
திண்டுக்கலில் பூக்களின் விலை சரிவு கடந்த மாதம் ரூ. 2000 முதல் ரூ. 3000 வரை விற்பனையான மல்லிகைப் பூ இன்று 100 முதல் 120 ரூபாய் வரை மட்டுமே விற்பனையானது. இதேபோல் ரோஜா பூ கிலோ ரூ.20-க்கும், செவ்வந்தி ரூ.10-க்கும் விற்பனையானது.
மேலும், கனகாம்பரம், தாமரை, பட்டன் ரோஸ், அரளி, செவ்வரளி, தாமரை உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் சுபமுகூர்த்த தினங்கள் தொடங்க உள்ள நிலையில் பூக்களின் விலை அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.