திண்டுக்கல்: உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
அவ்வாறு செல்லும் பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் படிப்பாதை வழியே தான் சென்று வருகின்றனர். பழனியில் கடந்த சில நாட்களாக இரவு, அதிகாலையில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கவும், குளிருக்கு இதமாகவும் சுக்கு காபி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது படிப்பாதை வழியே செல்லும் பக்தர்களுக்கு இடும்பர் சன்னதி அருகில் சுக்கு காபி வழங்கப்படுகிறது.