திண்டுக்கல்: கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் போதைக் காளான், கஞ்சா விற்பதாக கொடைக்கானல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் மேல் மலைப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கைகாட்டி கிராமத்தில் பகுதியில் சிறிய காட்டேஜ் ஒன்றில் போதை காளான், கஞ்சா, மற்றும் போதை மருந்து ஆகியவை சுற்றுலா பயணிகளுக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த காட்டேஜை சுற்றி வளைத்தனர்.
காட்டேஜ் உள்ளே சோதனையிட்டதில் அந்த காட்டேஜை நடத்தும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் கான் (34), என்பவரும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆன்ஸ் ஜோஸ் (30), ஜெய்சன் (29), டோமினிக் பீட்டர் (28), அகில் பெர்னாண்டஸ் (27), ஜான் (25), மற்றும் சிறுவன் உட்பட ஏழு பேர் அங்குள்ள சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் காளான் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
காட்டேஜ் மற்றும் ஏழு நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் 800 கிராம் கஞ்சா, இரண்டு கஞ்சா செடிகள், 50 கிராம் போதை காளான் மற்றும் சிறிய அளவிலான மெத்த பெட்டமைன் என்ற போதை மருந்து ஆகியவற்றை கொடைக்கானல் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஏழு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் தந்தை மரணம்: கணவருக்கெதிராக களமிறங்கிய பெண்