திண்டுக்கல்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதன்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பழனி கோயிலில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் 330 பேர் இன்று (நவ.5) பேட்ஜ் அணிந்தபடி பணியில் ஈடுபட்டு, தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
3 மாதங்களாகியும் அரசு அறிவித்த ஊக்கத்தொகை வரவில்லை தீபாவளி போனஸும் வழங்கவில்லை
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வரும் தங்களுக்கு மொட்டையடிக்கும் பக்தர்களிடம் கோயில் நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திலிருந்து பங்குத்தொகை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோயில்களில் கட்டணமில்லாமல் மொட்டை அடிக்கப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும்; அத்துடன் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஊதியமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒருமுறை கூட வழங்கப்படவில்லை
கரோனா காரணமாக கோயிலில் பக்தர்களுக்கு அனுமதிமில்லாததால் ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த தங்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை உதவியாக இருக்கும் என நம்பினோம். ஆனால், மூன்று மாதங்களாகியும் ஒருமுறை கூட ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, அரசு உத்தரவு வரவில்லை எனப் பதிலளிக்கின்றனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த தீபாவளி போனஸும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளோம்.
மேலும் அரசு அறிவித்த ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 5 ஆயிரம் ரூபாயாக அறிவித்திருந்த ஊக்கத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வரும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக அமைச்சர் முல்லை பெரியாறு அணையை பார்த்தாரா? - அமைச்சர் துரைமுருகன் கேள்வி