தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆகமவிதி ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல... நமக்கு நாமே வகுத்துக்கொண்டது... - அமைச்சர் சேகர்பாபு

ஆகமவிதகளை மீறி பழனி கோயில் கும்பாபிஷேகத்தில் எந்த காரியமும் நடத்தப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 25, 2022, 3:56 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த சேகர்பாபு

திண்டுக்கல்: பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. 16ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று (டிச.25) நடைபெற்றது. மலைக்கோயில் மேல்பிரகாரத்தில் உள்ள பாறைவேல் மண்டபம் மற்றும் கார்த்திகை மண்டபம் ஆகியப் பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று முகூர்த்தக்கால் ஊன்றினர். தொடர்ந்து பழனி மலைக்கோயில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்க விமானத்தைச் சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலிகள் ஆகியவற்றை அகற்றிவிட்டு, 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பித்தளையால் ஆன தடுப்பு கம்பிகள், மடக்கு கதவுகள், பாதுகாப்பு வேலிகள் ஆகியவை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.

முன்னதாக பழனி திருக்கோயிலுக்குச் சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 'பழனி கோயிலில் குடமுழுக்குப் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. 16 கோடி ரூபாயில் கற்கள் மற்றும் அலங்கார வேலைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாயில் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்தமாக 88 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருக்கோயில் நிதி மூலமாக 26 பணிகளும், உபயதாரர்கள் மூலமாக 62 பணிகளும் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் நிறைவுபெற்று ஜனவரி 27ஆம் தேதி நல்ல முறையில் குடமுழுக்கு நடைபெறும்.

பழனி முருகன் கோயிலுக்கு வருடத்திற்கு சராசரியாக ஒரு கோடியே இருபது லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, பழனி கோயிலில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 200 கோடி ரூபாயில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளைத் தொடங்குவதற்கான டெண்டர்கள் விடப்படும். அதற்காக முழு வீச்சில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மூலவருக்கு மருந்து சாத்துதல் குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து நிரந்தரமாகப் பணியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆகமவிதிகள் என்பது ஆண்டவனால் வகுக்கப்பட்டது அல்ல, நமக்கு நாமே வகுத்துக்கொண்டது. எந்த ஒரு பணி செய்தாலும் அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. யாருடைய தலையீடும் இல்லாமல் மூத்த அர்ச்சகர்களோடு கலந்து பேசி ஆகமவிதிக்கு உட்பட்டே கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார், வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details