திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேடசந்தூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் இயங்கிவரும் பஞ்சாலைகளில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜோதிமணி, "பஞ்சாலை விவகாரங்களை பொறுத்தவரையில் இந்தப் பிரச்னையை இரண்டு வகையில் பார்க்க வேண்டும். ஒன்று பெண்களுக்கான பாதுகாப்பு மற்றொன்று பெண்களின் வேலை இழப்பு.
பெண்கள் வேலையின்மைக்கு காரணம் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகும். ஏனெனில் மோடி இந்த நடவடிக்கை மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டார். அதனால் அத்துறைகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.
அடுத்ததாக தற்போதைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆண்களும் அச்சம் கொள்ளும் நிலை நிலவுகிறது. நான் கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கான பிரத்யேகமாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய சேவை தொடங்கப்படும்.
இதில் பெண்களின் மேம்பாடு மற்றும் அவர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி அமைக்கப்படும். இதில் பெண்கள் தங்களுடைய பிரச்னைகள் குறித்து எவ்வித அச்சமுமின்றி தெரிவிக்கலாம்" என்று கூறினார்.